சாதனைப் பெண்கள்:ஊனத்தை வென்று சாதிக்கும் மாதவி லதா!
எவ்வளவோ சோதனைகள் வந்த போதிலும் மனம் தளராத தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக இருக்கிறார் மாதவி லதா.,,,,,,,,,
"நான் பிறந்து 7 மாதம் ஆனபோது திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவரை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த எனது கால்கள் நடக்க முடியாமல் போனது. அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது போலியோ பாதிப்பு என்பது தெரிய வந்தது. அதன்பிறகு பல சோதனைகள். அதையெல்லாம் கடந்து வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது நான் முன்பிருந்ததைவிட சந்தோஷமாக இருக்கிறேன். நாங்கள் சென்னைக்கு குடியேறிய பிறகுதான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது..." என்கிற மாதவி லதா, ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பெற்றோரோடு சென்னைக்கு தொழில் நிமித்தமாக குடிபெயர்ந்து இருக்கிறார்.
மாற்றுத் திறனாளிகளால் சுலபமாக செய்துவிட முடியாத நீச்சல் பயிற்சியில் தனித்திறன் பெற்று, இந்த ஆண்டு சென்னையில் நடந்த கார்பரேட் கம்பெனிகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 'ஒலிம்பியாட்' போட்டியில், ப்ரீ ஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதே போட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு 'சிறந்த ஊக்கமளிக்கும் விளையாட்டு வீராங்கனை' என்கிற விருதையும் பெற்றுள்ளார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பேசி வரும் இவர், அவர்களுக்காக 'யெஸ், வீ டூ கேன்' என்கிற அமைப்பையும் ஏற்படுத்தி நடத்தி வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகவும் பணிபுரிகிறார்.
இனி, அவர் நம்முடன் பேசியதில் இருந்து...
நீச்சல் போட்டியிலும் நம்மால் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் உங்களிடம் எப்படி ஏற்பட்டது?
"2007-ம் ஆண்டு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். சென்னையில் உள்ள பிரபல பிசியோதெரபிஸ்ட் ஆனந்தஜோதி என்பவரிடம் சிகிச்சை பெற்றேன். அவர் எனக்கு தண்ணீருக்குள் இருக்கும் 'ஹைட்ரோதெரபி' என்கிற சிகிச்சையை அளித்தார். உடல் செயல்பாடு இல்லாதவர்களுக்கான சிகிச்சை முறை இது. பொதுவாக என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் தரையில் உபகரணங்கள் உதவியுடன் நடமாடும்போது அவர்களது உடல் எடை காரணமாக எலும்பு மூட்டு பகுதிகளில் அதிக வலி ஏற்படும். தண்ணீருக்குள் உடலின் எடை குறைவு என்பதால், அங்கே கை, கால்களை சுலபமாக அசைக்க முடியும். ஹைட்ரோதெரபி இதுபோன்ற உடற்பயிற்சி என்பதால் நானும் அதை தொடர்ச்சியாக செய்ய ஆரம்பித்தேன். அதற்கு உடனடியாக பலனும் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்த வலி படிப்படியாக காணாமல் போய்விட்டது. என் உடலில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்குப் பிறகுதான் ஒலிம்பியாட் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதில் பங்கேற்று பரிசும் பெற்றேன்.
மாற்றுத் திறனாளி என்பதற்காக வருத்தப்பட்டது உண்டா?
சின்ன வயதில்தான் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், இதே உடலோடுதான் இந்த பூமியில் வாழ்ந்தாக வேண்டும் என்பதால் மனதை தேற்றிக்கொண்டேன். 10-ம் வகுப்புவரை ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தேன். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் மாடிக் கட்டிடங்களில் நடத்தப்பட்டதாலும், அந்த வகுப்பு நடைபெறும் அறைக்கு என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் வீல் சேரில் சென்று வர வசதி செய்யப்படாத காரணத்தாலும் எனது நேரடியான பள்ளி மேற்படிப்பு தடைபட்டது. அதேநேரம், பிரைவேட்டாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இன்று நான் படித்துள்ள எம்.பி.ஏ., மற்றும் சில சான்றிதழ் படிப்புகள் எல்லாமே பிரைவேட்டாக எழுதி தேர்ச்சி பெற்றவைதான். இந்த படிப்புகளுக்காக நான் எந்த விசேஷ பயிற்சிக்கும் செல்லவில்லை. எல்லாம் நானாக படித்ததுதான்.
போலியோ விழிப்புணர்வில் உங்களது இன்றைய பங்களிப்புகள்...
போலியோ விழிப்புணர்வில் உங்களது இன்றைய பங்களிப்புகள்...
'யெஸ், வீ டூ கேன்' அமைப்பின் மூலம் என்னால் முடிந்த உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்காக செய்து வருகிறேன். பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் மீதே நம்பிக்கை இல்லை. தங்களால் ஒரு விஷயத்தை செய்ய முடியுமா, முடியாதா என்று நினைத்தே, பயந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் நான்கூட என்னால் தண்ணீரில் நீந்த முடியும் என்று நம்பியதில்லை. ஹைட்ரோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும்போதுதான் நம்மாலும் நீந்த முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. கால்கள் ஊனமான மாற்றுத் திறனாளி ஒருவர், ஷூ போட்டுக்கொண்டும், மற்ற உபகரணங்கள் கொண்டும் நடக்க முயற்சிப்பதைக் காட்டிலும் படிப்படியாக நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்வது சிறந்தது.
நீச்சல் பயிற்சியின்போது கை, கால்களை சுலபமாக அசைக்க முடிகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளின் தசைகள் இன்னும் வலுப் பெறுகின்றன. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிறர் உதவியுடன்தான் நடக்க வேண்டும் என்கிற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள்கூட சுலபமாக உபகரணங்கள் உதவியுடன் நடக்க முடியும்.
ஆரம்பத்தில் எனக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது. இப்போது நானே என் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். தினமும் அலுவலகத்திற்கு செல்ல நானே காரை ஓட்டிக்கொண்டு செல்கிறேன். இதன் மூலம் என்னையும் சாதாரண மனுஷியாகவே உணர்கிறேன். என்னைப் போன்று பிற மாற்றுத் திறனாளிகளும் மன அளவில் தன்னம்பிக்கை பெற பல்வேறு உதவிகளை என்னுடைய அமைப்பின் மூலம் இலவசமாக செய்து வருகிறேன். அதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.
உங்கள் பார்வையில் தன்னம்பிக்கை என்பது...
இப்போது மாற்றுத் திறனாளிகளை இந்த சமுதாயம் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் புறக்கணிக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளும் மனிதர்கள்தான். மற்றவர்களைப் போன்று விளையாட இவர்களும் முயற்சிக்கலாம். வாலிபால் விளையாட ஆசைப்பட்டால் தரையோடு ஒட்டி வலையை கட்டிக்கொள்ளுங்கள். வாலிபால் மட்டுமின்றி, வீல் சேரில் இருந்து கொண்டே டென்னிஸ், பேட்மிண்டன் விளையாடவும் செய்யலாம். முடியும் என்றால் நிச்சயம் முடியும்.
உங்களை பிரமிக்க வைத்தவர்?
அமர் சேவா சங்கத் தலைவரான ராமகிருஷ்ணன் என்பவர். கயிறு அறுந்து கீழே விழுந்ததில் தலை அசைப்பதைத் தவிர மற்ற உடல் பாகங்களின் இயக்கம் திடீரென்று தடைபட்டுப் போனவர். விபத்திற்குப் பிறகு இவரால் சுயமாக செயல்பட முடியவில்லை. அவர் பேப்பர் படிக்க ஆசைப்பட்டால்கூட இன்னொருவர் அவர் முன்பு அதை பிரித்துக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் மாற்றுத் திறனாளிகளுக்காக அமர் சேவா சங்கத்தை ஏற்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
கடவுள் உங்களுக்கு உதவ முன் வந்தால்...
எனக்கு பெற்றோர்தான் கடவுள். ஒருவேளை கடவுள் நேரில் வந்தால், 'என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் எல்லோருக்கும் நிறைய தன்னம்பிக்கையை கொடுங்கள்' என்றுதான் கேட்பேன். எனக்காக எதுவும் கேட்க மாட்டேன். ஏனென்றால், நான் இப்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.
அடுத்த பிறவி இருந்தால்...
ஒரு பிறவி என்ன, 100 பிறவிகள் எடுத்தாலும் ஒரு பெண்ணாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். இதே மாதவியாக இருந்தாலும் சரி, அல்லது நார்மல் பெண்ணாக இருந்தாலும் சரி, தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக பிறக்க வேண்டும். தன்னம்பிக்கை இல்லையென்றால் வாழ்வதில் அர்த்தம் இல்லை.
ஆக்கப்பூர்வமான உங்களது அறிவுரை ஏதும்...
முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு... நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. உங்களால் என்ன முடியும் என்பதை முதலில் கண்டறியுங்கள். முடியும் என்று நினைத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அடுத்து, இன்றைய சமுதாயத்திற்கு... மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்தவரை உதவுங்கள். அவர்களை எக்காரணம் கொண்டும் உதாசீனப்படுத்தாதீர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பார்த்து பாவப்படாதீர்கள். அதற்குப் பதிலாக முடியும் என்கிற தன்னம்பிக்கையைத் தாருங்கள்..." என்கிற மாதவி லதா, பேச்சில் மட்டுமின்றி செயலிலும் உயர்ந்து நிற்கிறார்.
மாதவி லதா... மனம் திறந்து...
மாதவி லதா... மனம் திறந்து...
லட்சியம் - ஊனமுற்றோருக்கான பள்ளி அமைப்பது
பேராசை - சாகசங்கள் பல நிகழ்த்த
பொழுது போக்கு- நிறைய புத்தகங்கள் வாசிப்பேன்
விரும்புவது - நான் அறிந்ததை பிறருக்கு சொல்லிக்கொடுப்பது
விரும்பாதது - மற்றவர்கள் என் மீது பரிதாபப்படுவது
பெற்றோர் - எனக்கு கடவுள் போன்றவர்கள்
பார்க்க விரும்பும் இடம் - இமயமலை
சந்தோஷமான தருணம் - எப்போதும்
தனிமை - அப்படியொன்றும் இல்லை
பிடித்த பொன்மொழி - தன் கையே தனக்குதவி
பேராசை - சாகசங்கள் பல நிகழ்த்த
பொழுது போக்கு- நிறைய புத்தகங்கள் வாசிப்பேன்
விரும்புவது - நான் அறிந்ததை பிறருக்கு சொல்லிக்கொடுப்பது
விரும்பாதது - மற்றவர்கள் என் மீது பரிதாபப்படுவது
பெற்றோர் - எனக்கு கடவுள் போன்றவர்கள்
பார்க்க விரும்பும் இடம் - இமயமலை
சந்தோஷமான தருணம் - எப்போதும்
தனிமை - அப்படியொன்றும் இல்லை
பிடித்த பொன்மொழி - தன் கையே தனக்குதவி



No comments:
Post a Comment