அமைதி தவழும் வீடு. சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கி வைத்து விளையாடிக்
கொண்டிருக்கிறார், பாரதி. இவர் ஒரு சாதனைப் பெண். தேசிய சப்-ஜூனியர் சாம்பியனாகத் திகழ்ந்தவர். சமீபத்தில்
இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியிருப்பவர். பாரதியின் கவனத்தை சதுரங்கப் பலகையில் இருந்து நம் பக்கம் திருப்பி, பேசினோம்...
இலங்கை போட்டி
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இந்தியா, இலங்கை, மலேசியா, மாலத்தீவுகள், உஸ்பெக்கிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றோம். இந்தியாவில் இருந்து சென்ற மகளிர் அணியில் 5 பேர் இடம்பெற்றிருந்தோம். அதில், நான், சரண்யா, பொன்கிருத்திகா ஆகிய 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கமே நிலவியது. இந்திய வீராங்கனைகளுக்குச் சவாலாக இருந்தவர்கள் சக இந்திய வீராங்கனைகள்தான். நான், பஸ்நாயகே என்ற இலங்கை வீராங்கனையை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினேன்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கமே நிலவியது. இந்திய வீராங்கனைகளுக்குச் சவாலாக இருந்தவர்கள் சக இந்திய வீராங்கனைகள்தான். நான், பஸ்நாயகே என்ற இலங்கை வீராங்கனையை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினேன்.
இறுதிச் சுற்றில், கோவாவைச் சேர்ந்த மகளிர் கிராண்ட் மாஸ்டர் பக்தி குல்கர்னியைச் சந்தித்தேன். ஏறக்குறையை மூன்று சுற்றுக்கு முன்பே அவருக்குத் தங்கப் பதக்கம் உறுதியாகியிருந்தது. அவருடன் நான்கு மணி நேரம் போராடித் தோற்ற நான், வெள்ளிப் பதக்கம் பெற்றேன். வெற்றியை நழுவவிட்ட போதும், சிறந்த வீராங்கனையிடம் தோற்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
'ஸ்பெஷல்' வெற்றி
இலங்கையில் நான் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போட்டியில், 18 வயதே நிரம்பிய நான், 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இவ்வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் இதைவிட முக்கியமானதாகக் கருதுவது, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டியில் நான்காவது இடம்பெற்றதை.
சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற அப்போட்டி, மிகவும் சவாலானதாக இருந்தது. இறுதிச் சுற்றில் இதே பக்தி குல்கர்னியுடன் 'டிரா' செய்த நான், நான்காவது இடம் பெற்றேன். பதக்கம் வெல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றபோதும், அப்போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்ததாகக் கருதுகிறேன்.
தேசிய பட்டம்
நான் கடந்த 2008-ம் ஆண்டு தேசிய மகளிர் சப்-ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றேன். கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் நான் மேற்கு வங்காள வீராங்கனை சுகன்யா தத்தாவை எதிர்கொண்டு வென்றது மறக்க முடியாதது. கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற, முன்னணி வீராங்கனைகள் பங்குபெறும் பெருமைக்குரிய தேசிய பிரீமியர் 'ஏ' போட்டியில் 10-வது இடம் பெற்றதையும் சிறப்பானதாகக் கருதுகிறேன். செஸ்சை பொறுத்தவரை சிறு சறுக்கலும் எங்கோ பாதாளத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். கோப்பை வெல்லும் நிலையில் இருந்து கிடுகிடுவென்று கீழே போய்விடுவோம். அந்த வகையில், நான் மேற்கூறிய சில போட்டிகளில் பட்டம் வெல்லவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் பெருமையாக உணர்ந்திருக்கிறேன்.
'சென்டிமென்டும்', பலவீனமும்
செஸ் விளையாட்டின் நிலையற்ற தன்மை காரணமாக இதை விளையாடுவோருக்கு நிறைய 'சென்டிமென்ட்' உண்டு. நானும் எங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியை ராசியானதாக கருதுகிறேன். குறிப்பிட்ட ஆடையை அணிந்து சென்றால் நன்றாக ஆட முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், வீம்புக்காகவே 'ராசியில்லாத' ஆடையை 'தில்'லாக அணிந்து சென்று வென்றதும் நடந்திருக்கின்றன. முக்கியமான போட்டிகளில் இறுதிச் சுற்றில் நெருக்கடியை உணர்ந்து வெற்றியை நழுவ விடுவது எனது பலவீனமாக இருக்கிறது. அதனாலேயே, பல குறிப்பிடத்தக்க பட்டங்களைக் கைநழுவ விட்டிருக்கிறேன். இனிமேல், முடிவு பற்றி யோசிக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆடணும் என்று உறுதி கொண்டிருக்கிறேன்.
படிப்பில் ஜொலிக்கிறேன்
படிப்பில் ஜொலிக்கிறேன்
விளையாட்டு, படிப்பு இரண்டிலும் சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள் கொஞ்சம் குறைவுதான். அந்தவகையில் நான் இவை இரண்டிலுமே ஜொலிப்பதாக நினைக்கிறேன். 9-ம் வகுப்பு வரை பள்ளியில் முதல் மாணவி நான்தான். இந்தாண்டு பிளஸ் 2-வில் 96.3 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து, படிப்பு, செஸ் இரண்டையும் 'பேலன்ஸ்' செய்ய முடியும் என்று நம்புகிறேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, 'நானோ டெக்னாலஜி' பயிலத் தீர்மானித்திருக்கிறேன்.
தமிழகத்தின் ஆதிக்கம்
சதுரங்கக் களத்தில் தேசிய, சர்வதேச நிலையில் தமிழக வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு, தமிழக சதுரங்கக் கழகத்தின் ஆதரவு, ஊக்குவிப்பு, சிறந்த பயிற்சியாளர்கள், நல்ல வீரர், வீராங்கனைகளுடன் அடிக்கடி மோதும் வாய்ப்பு, சர்வதேச அளவில் சாதிப்போரால் கிடைக்கும் ஊக்கம் ஆகியவை முக்கியக் காரணம். தனிப்பட்ட முறையில், நான் படித்த முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அதன் தலைவர் முத்துராமலிங்கம் அளித்த பொருளாதார உதவியுடனான ஊக்கம், சதுரங்கப் பொறுப்பாளர் ராஜ்மோகன் அளித்த உறுதுணை, நான் தற்போது பயிற்சி பெறும் 'செஸ் குருகுல்'லின் பயிற்சியாளர்கள் ஆர்.பி. ரமேஷ், கணேஷ், கூடியமட்டும் என்னுடன் போட்டிகளுக்கு வரும் எனது பெற்றோர் (அப்பா- ராமராஜ், அம்மா- உஷா) ஆகியோரே எனது வெற்றிகளின் பின்னணி.
ஸ்கேட்டிங், ஸ்விம்மிங்...
சிறுவயதில் துறுதுறுவென்று திரிந்து கொண்டிருந்த என்னை ஓரிடத்தில் உட்கார வைப்பதற்காகத்தான் எனக்குப் பெற்றோர் சதுரங்கம் கற்றுக் கொடுத்தனர். செஸ் தவிர, ஸ்கேட்டிங், நீச்சல், பரத நாட்டியம் கற்றேன். ஆனால் இவையெல்லாம் காலப்போக்கில் விடைபெற்றுவிட, செஸ் மட்டும் என்னுடன் தொடர்கிறது. எனக்கு 'ரிலாக்ஸ்' அளிக்கும் விஷயமாக இசை மட்டும் மாறவில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது தொடங்கிய எனது சதுரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டியிருப்பதாகக் கருதுகிறேன். மற்றபடி, சதுரங்கத்துக்காக நான் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தபோதிலும் அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை.
சதுரங்கத்தில் தொடர் கவனம்
சதுரங்கத்தில், டபிள்யூ.ஐ.எம்., டபிள்யூ.ஜி.எம். என்று நான் எட்ட வேண்டிய படிகள் இருக்கின்றன. இரண்டு, மூன்றாண்டுகளில் இவற்றைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே எனது சதுரங்கப் பயணம் தொடர்கிறது. பயிற்சியாளர்கள், பெற்றோர், எனது நலம் விரும்பிகள் சந்தோஷம் அடையும் வகையில் புதிய உயரங்களை எட்டுவேன்.
பாரதியின் 'பளீர்' புன்னகையில் நம்பிக்கை மறைந்திருக்கிறது!



No comments:
Post a Comment