my home

Powered By Blogger

Friday, 21 October 2011

சாதனை

சாதனைப் பெண்கள்:உலக சாம்பியன் பட்டம் பெறுவதே லட்சியம்: மோனிஷா




நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வெற்றி நம்மை சுற்றி வரும் என்பதற்கு உதாரணம் இளம்பெண் மோனிஷா.
சின்ன வயதில் தொலைந்து போனவர், தனது அதீத நம்பிக்கையால் பெற்றோரை கடும் முயற்சியுடன் தேடி கண்டுபிடித்தவர்... படிப்புதான் முக்கியம் என்று நினைக்கும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் தனது கனவு விளையாட்டையும் கைவிடாமல் சாதனை நிகழ்த்தி வருகிறார். இருபது வயதுக்குள் இந்திய அளவிலும், மாநில அளவிலும் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்றிருக்கும் மோனிஷா, சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில், பெல்காமில் நடந்த டேபிள் டென்னிஸ் தென் மண்டலப் போட்டியிலும் தங்கத்தை வென்றுள்ளார்.
அடுத்து சர்வதேச அளவில் சாதிக்க... வியர்க்க விறுவிறுக்க பயிற்சி ஆட்டத்தில் பரபரப்பாக இருந்தவரிடம் 'ஹாய்' சொன்னோம். போட்டியில் ராக்கெட் வேகத்தில் வரும் பந்தை, 'நச்' என்று அடித்து விரட்டும் மோனிஷாவின் பேச்சில் பக்குவம் கலந்த நிதானம்.
"எப்படி சாத்தியமாச்சு இந்த சாதனை?" என்று கேட்டால்,
"சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் மிகவும் ஈடுபாடாக இருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, கோடை பயிற்சி முகாம் நடந்தது. அதில் இடம்பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு எனக்கு புதிதாகவும், வித்தியாசமான விளையாட்டாகவும் தெரிந்ததால், அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. உடனே அப்பாவிடம் எனது விருப்பத்தை கூறினேன். அவரும் என்னை டேபிள் டென்னிஸ் விளையாட அனுமதித்தார். பள்ளியில் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். பின்னர் இதற்கான பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று வருகிறேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களில் மாவட்டம், மண்டலம், மாநில மற்றும் தேசிய அளவில் நூற்றுக்கணக்கான பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளேன்" என்றார்.
தனது வெற்றிகள் குறித்து பேசுகையில், "தேசிய, மாநில அளவில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்றிருந்தாலும், கடந்த ஜனவரி மாதம் பெங்களூர் அருகே உள்ள பெல்காமில் நடந்த தேசிய போட்டியில் தங்கம் வென்றதை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது!" என்கிறார் பெருமிதமாக...
"எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கி, உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும். அடுத்து சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளை குவிக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் லட்சியம். அதேபோல், அடுத்து எம்.பி.ஏ., படித்து, பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிய ஆசை" என்று அடுத்தடுத்து ஆசைகளை பட்டியலிடுகிறார் மோனிஷா.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். தெளிவாக பதில் அளிக்கிறார் மோனிஷா...
 
* உங்களுடைய முதல் போட்டி..?
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மயிலாப்பூரில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்றதுதான் நான் கலந்து கொண்ட முதல் பந்தயம். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.
* டேபிள் டென்னிஸ் விளையாட்டில் எதில் நீங்கள் ஸ்பெஷல்?
பாம்பு சர்வீஸ் என்பார்கள்..! அதாவது பாம்பு மாதிரி வளைந்து வளைந்து பந்தை அடிக்கணும். அதில் நான் ஸ்பெஷல். அப்புறம்... பிளாக், புஷ் சர்வீஸ் சிறப்பாக பண்ணுவேன்.
* டேபிள் டென்னிஸ் தவிர வேறு எந்த துறையில் ஆர்வம்..?
போட்டோகிராபி, ஓவியம், மெகந்தி மற்றும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஆகியவற்றில் பரிசுகள் பெற்றுள்ளேன். அப்புறம்... கிரிக்கெட், கோகோ, கபடி ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு.
* உங்களுடைய குடும்பம் பற்றி..?
அப்பா மோகன் ரிசர்வ் வங்கியில் விருப்ப ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். அம்மா ஜெயந்தி இல்லத்தரசி. அண்ணன் மனோஜ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நான் சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் இரண்டாமாண்டு முடித்துள்ளேன்.
* உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை எது?
எனக்கு படிப்பிலும் ஆர்வம் அதிகம். பிளஸ் 2வில் 93 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தேன். சின்ன வயதில் டாக்டர் ஆசை இருந்ததால், டாக்டருக்கு படிக்க முடிவெடுத்தேன். அப்போது மும்பையில் வசித்த பெற்றோர், எனக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அவர்களுக்காக விஸ்காம் படித்தேன். தற்போது எனக்கு விஷுவல் குறித்த படிப்பு மிகவும் பிடித்துள்ளது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இதுவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனையாக கருதுகிறேன்.
* பிடித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் யார்?
எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஷாமினி ஆகியோரை பிடிக்கும்.
* நீங்கள் திருத்திக் கொள்ள நினைக்கும் விஷயம் எது?
எனக்கு முன்கோபம் அதிகமாக வரும். அதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மற்ற விஷயங்களில் ஆர்வத்தை தவிர்த்து, டேபிள் டென்னிஸ் மீது மட்டும் கவனம் செலுத்தினால் இன்னும் நிறைய சாதனைகளை செய்வேன் என்று நம்புகிறேன்.
* பொழுது போக்கு..?
எனக்கு சிறுவர், சிறுமியருடன் கிரிக்கெட் விளையாட ரொம்ப பிடிக்கும். டிவி, கம்ப்யூட்டர், பேஸ்புக் ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் பொழுது போக்குவேன்.
* வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் எது?
நான் யு.கே.ஜி. படிக்கும்போது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். போட் கிளப் அருகே பெற்றோரை விட்டு பிரிந்து தொலைந்துவிட்டேன். எனக்கு சின்ன வயது முதலே கார் நம்பர்களை மனப்பாடம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்ததால், நாங்கள் வந்த கார் நம்பரை அருகில் இருந்த வாட்ச்மேனிடம் கூறி அங்கேயே நின்றேன். அவரும் எனக்கு தைரியம் கூறி அருகில் வைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் என்னைத் தேடி வந்தார் அப்பா. இந்த சம்பவத்திற்கு பின்னர் எங்கே சென்றாலும் கார், செல், கதவு எண் என அனைத்து நம்பர்களையும் மனதில் குறித்துக் கொள்வேன்.

No comments:

Post a Comment

About Me

My photo
srilanka, Sri Lanka
i'm jinothini from jaffna...